பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாயே தனது 3 குழந்தைகளைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா பஷீர் என்ற பெண்ணுக்கும் பாபர் உசேன் என்பவருக்கும் சமூக வலைதளம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், சித்ரா தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தைகள் உயிருடன் இருந்தால் தங்களால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கருதிய அந்த இருவரும், 3 முதல் 7 வயதுக்குட்பட்ட அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி குழந்தைகளுக்குப் பழக்கூழ் மற்றும் உணவில் அதிக அளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளனர். குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற பிறகு, அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொடூரக் கொலையை மறைக்க எண்ணிய அவர்கள், குழந்தைகளின் உடல்களை அடையாளம் காண முடியாதபடி ஆளில்லாத பகுதியில் வைத்து எரித்து விட்டு பின்னர் மண்ணில் புதைத்துள்ளனர்.
சித்ராவின் கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சித்ராவை முதலில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தைகளின் கொலை மற்றும் கள்ளக்காதலன் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சித்ரா அடையாளம் காட்டிய இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு புதைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் உடல்களைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கள்ளக்காதலன் பாபர் உசேனையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
