கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பணி முடித்துவிட்டு விடுதிக்குத் திரும்பிய பெண் மருத்துவரிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஜிபி லேஅவுட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 28 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் தனது பணியை முடித்துவிட்டு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், வழி கேட்பது போல மருத்துவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். திடீரென அந்த நபர் மருத்துவரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் கூச்சலிட்டதை அடுத்து, அந்த நபர் அங்கிருந்து தனது வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சோலதேவனஹள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய அந்த நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பெண் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.
