நாமக்கல்லில் பாதாள சாக்கடைக் குழியில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாநகராட்சி 4-வது வார்டில் பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட 5 அடி ஆழமுள்ள குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து, ரோகித் என்ற 4 வயது சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இந்த மரணத்திற்கு தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே முழு முதற் காரணமாகும். தவறு என்பது ஒருமுறை நிகழ்வது. ஆனால், இது போன்ற உயிரிழப்புகள் மீண்டும் மீண்டும் நடப்பது நிர்வாகச் சீர்கேட்டால் நடந்த கொலை என்று சொன்னால் அது மிகையாகாது.
டெண்டர் விடுவதிலும், கமிஷன் வாங்குவதிலும் காட்டும் கவனத்தை, பணிகளைப் பாதுகாப்பாகச் செய்வதில் இந்த ‘விடியா அரசு’ காட்டுகிறதா? தன் குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? “தெரியாமல் நடந்துவிட்டது, மன்னித்து விடுங்கள்” என்று சொல்லப் போகிறாரா? இன்னும் எத்தனை முறை நாம் இதையே கேட்க வேண்டும்?
உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானது அல்ல. குழந்தையின் இழப்புக்கு ஈடாக எதையும் வழங்க முடியாது என்றாலும், அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், பாதாள சாக்கடை போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
