சென்னை திருமங்கலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடி ஸ்பீக்கர்கள் அமைத்து உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் கொண்டாட்டங்கள் முடிந்து ஸ்பீக்கர்கள் அணைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த ஒரு வீட்டிலிருந்து சிறுமி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், சத்தம் வந்த மதிவாணன் என்பவரது வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், மதிவாணனைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், பெற்றோர் துணையின்றிச் சிறுமி தனியாகக் கொண்டாட்டத்திற்கு வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மதிவாணன் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மதிவாணன் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதிவாணன், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது இடது கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. இது குறித்துப் போலீசார் தரப்பில் கூறுகையில், “கைது நடவடிக்கையின் போது தப்பிச் செல்ல முயன்ற மதிவாணன், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, மதிவாணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
