தமிழகத்தில் போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்கவும், தேவையற்ற உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் இனி ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்பக்கத்தில் ‘சிவப்பு நிறக் கோடு’ (Red Line) இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அத்தகைய குறியீடு இல்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சிவப்புக் கோடு உள்ள மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும், பொதுமக்கள் சுயமாக உட்கொள்ளக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆலோசனையின்றித் தாங்களாகவே ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வது உடலில் ‘நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலை’ (Antibiotic Resistance) உருவாக்கி, எதிர்காலத்தில் தீவிர நோய்களுக்கு மருந்துகள் பலனளிக்காமல் போகும் அபாயத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி மருந்துகள் மற்றும் மருந்தின் பக்கவிளைவுகள் குறித்துப் புகாரளிக்க அனைத்து மருந்தகங்களிலும் பிரத்யேக ‘கியூ ஆர் கோடு’ (QR Code) ஒட்டப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் பொதுமக்கள் அதனை ஸ்கேன் செய்து உடனடியாகப் புகாரைப் பதிவு செய்யலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.