உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் மூடநம்பிக்கையைப் பயன்படுத்திச் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பதேபூர் சிக்ரி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் ஜகதீஷ்புரா பகுதியில் உள்ள ஒரு மாந்திரீகரை அணுகியுள்ளனர்.
அப்போது அந்தச் சிறுமிக்கு செய்வினை இருப்பதாகவும் அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி அந்த மாந்திரீகர் குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார். மாந்திரீகச் சடங்குகள் மூலம் இதைக் குணப்படுத்திவிடலாம் என்று கூறிய அவர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினர் அனைவருக்கும் மந்திரித்த நீரைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.
குடும்பத்தினர் மயக்கத்தில் இருந்த நிலையில் அந்த மாந்திரீகர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு உதவியாக வந்த ஒரு பெண் செவிலியர் போல நடித்துச் சிறுமியை அச்சுறுத்தி உடைகளைக் களையச் செய்துள்ளார். இதற்கிடையே மயக்கம் தெளிந்த குடும்பத்தினர் மாந்திரீகரின் அத்துமீறலைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மாந்திரீகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
