அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான ‘கிரீன் கார்டு’ பெறும் விதிமுறைகளை அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேலும் கடுமையாக்கியுள்ளது. இனி அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்து கொள்வது மட்டுமே கிரீன் கார்டுக்கு உத்தரவாதம் அளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்கக் குடிவரவுத் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் வருமாறு:
வெளிநாட்டவர் ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிப் பணியாற்றுவதற்கு ‘கிரீன் கார்டு’ சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. வழக்கமாக, அமெரிக்கக் குடிமக்களைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எளிதாக கிரீன் கார்டு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி முறைகேடாகக் குடியுரிமை பெறப் பலர் போலித் திருமணங்கள் செய்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன. தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, திருமண அடிப்படையிலான விண்ணப்பங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட தம்பதியினர் குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே திருமணம் செய்துகொண்டார்களா அல்லது அவர்கள் உண்மையாகவே இணைந்து வாழ்கிறார்களா என்பதை அதிகாரிகள் நேரிடையாக ஆய்வு செய்வார்கள்.
கிரீன் கார்டு கோரும் தம்பதியினர் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. படிப்பு, வேலை அல்லது வசதி ஆகிய காரணங்களுக்காகக் கணவன் – மனைவி வெவ்வேறு இடங்களில் வசிப்பதாகக் கூறினால், அத்தகைய காரணங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது.
தம்பதியினர் ஒன்றாக வசிப்பதற்கான ஆதாரங்கள் இல்லையென்றால், அவர்களது திருமணத்தின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் கடுமையான கேள்விகளை எழுப்புவார்கள். தம்பதியினர் இணைந்து வாழ்வது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே கிரீன் கார்டு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் குடியேற்றம் தொடர்பான சட்டங்களை மேலும் முறைப்படுத்தும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, போலித் திருமணங்கள் மூலம் அமெரிக்கக் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
