அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னி வேர்ல்டு கேளிக்கைப் பூங்காவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இண்டியானா ஜோன்ஸ் திரைப்படக் காட்சியை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நேரடி நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக சுமார் 180 கிலோ எடையுள்ள ரப்பர் பாறை ஒன்று அதன் பாதையிலிருந்து விலகி பார்வையாளர்களை நோக்கி உருண்டது.

 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராபர்ட் என்ற ஊழியர் பார்வையாளர்கள் மீது அந்தப் பாறை மோதாமல் இருக்கத் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதன் முன்னால் குதித்துத் தடுத்தார். அந்தப் பாறை மோதியதில் பலத்த காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது சாதுர்யமான செயலால் பலரது உயிரைக் காப்பாற்றிய அந்த ஊழியரை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிய நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த குறிப்பிட்ட சாகசக் காட்சியில் மாற்றம் செய்யப்படும் என்று டிஸ்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது.