ஜெர்மனியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயது மாணவர் உயிரிழந்தார். சங்கராந்தி பண்டிகைக்காக அவர் ஊருக்கு வரவிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம், ஜங்காவ்ன் மாவட்டம் மல்காபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹ்ருதிக் ரெட்டி (25). இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதுகலைப் பட்ட மேற்படிப்பிற்காக ஜெர்மனியில் உள்ள மாக்ட்பர்க் நகருக்குச் சென்றார்.

புதன்கிழமை இரவு, பெர்லினில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவி, வீடு முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஹ்ருதிக் ரெட்டி, அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இந்த விபத்து, கொண்டாட்டத்தில் இருந்த அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹ்ருதிக் ரெட்டி கடந்த தசரா பண்டிகைக்குத் தெலங்கானா வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்தப் பயணத்தைத் தள்ளிவைத்த அவர், ஜனவரி இரண்டாவது வாரத்தில் வரும் சங்கராந்தி பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட வீட்டிற்கு வருவதாக உறுதியளித்திருந்தார். அவர் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த பெற்றோருக்கு, அவரது மரணச் செய்தி இடியாக இறங்கியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஹ்ருதிக் ரெட்டியின் உடலை இறுதிச் சடங்குகளுக்காகச் சொந்த ஊருக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், இதே ஜங்காவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஜா ரெட்டி (24) என்ற மாணவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் கல்வி கற்கச் சென்ற தெலங்கானா மாணவர்கள் அடுத்தடுத்து தீ விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.