ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடரில், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். தொடக்க ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர், மெல்போர்ன் அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் 46 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருப்பினும், அவர் மிகவும் மெதுவாக விளையாடியது ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளிட்டோரின் விமர்சனத்துக்கு உள்ளானது. களத்தில் செட்டிலான பிறகும் அதிரடி காட்டாமல், ரன் சேர்க்கும் பொறுப்பை மற்ற வீரர்களிடம் தள்ளிவிடுகிறார் என கில்கிறிஸ்ட் நேரலையிலேயே அதிருப்தி தெரிவித்தார்.

பாபர் அசாம் ஒருபுறம் நிதானமாக விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ஜோயல் டேவிஸ் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசி சிட்னி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் சிட்னி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் அணியைத் தோற்கடித்தது.

பாபர் அசாம் அரைசதம் அடித்திருந்தாலும், டி20 கிரிக்கெட்டுக்குத் தேவையான வேகத்துடன் அவர் விளையாடவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 126 என்கிற குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடியது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.