மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 19 வயது இளம்பெண் ஒருவரை நிலத்தரகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் தனது தாயின் மருத்துவச் செலவிற்காகப் பணம் தேவைப்பட்ட நிலையில் ஜாகூர் என்ற நபரிடம் உதவி கோரியுள்ளார்.

ஆனால் ஜாகூர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து சமீர் என்ற பெயரில் அந்தப் பெண்ணிடம் பழகியுள்ளார். கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு நிதியுதவி அளிப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை நேரு நகர் பகுதிக்கு வரவழைத்த அவர் அங்கிருந்து சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் உடனடியாக அவசரக் காவல் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததை அடுத்து ரதிபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டனர். அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு முறையான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள குற்றவாளி ஜாகூரைத் தேட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல் நிலைய ஆய்வாளர் ராஸ்பிகாரி சர்மா தெரிவித்துள்ளார். ஏழைப் பெண்ணின் வறுமையைப் பயன்படுத்தி அடையாளத்தை மறைத்து நடத்தப்பட்ட இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.