உத்தரப்பிரதேசத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்த 6 பேர் கொண்ட மோசடிக் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களுக்கு, போலியான நில வருவாய் ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி இவர்கள் ஜாமின் பெற்றுத் தந்துள்ளனர்.

இதுவரை சுமார் 23 வழக்குகளில் இதுபோன்று மோசடி செய்துள்ள இந்தக் கும்பல், ஒரு வழக்கிற்கு 20,000 ரூபாய் வரை வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் முக்கியக் குற்றவாளியாக பிங்கு என்கிற பிரேம் சங்கர் என்பவர் செயல்பட்டுள்ளார்.

இவர் நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பங்கள் எழுதும் வேலை செய்துகொண்டே, போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் ஜாமின்தாரர்களை ஏற்பாடு செய்வதிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் கும்பலில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது ஜாமினில் இருக்கும் பிரவீன் தீட்சித் என்பவரும் இணைந்து செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான 6 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.