சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே, உயிருடன் இருக்கும் அதிமுக கிளைச் செயலாளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பிரிவில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளாளகுண்டம்  பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (60). இவர் அப்பகுதியின் அதிமுக கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

புதிய வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டு காந்தி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்தபோது, வெள்ளாளகுண்டம் பகுதிக்கான ‘இறந்த வாக்காளர்கள்’ பட்டியலில் 7-வது இடத்தில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.

உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) காந்தி முறையிட்டார். அப்போது அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. உரிய விசாரணை நடத்தாமல், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி நிர்வாகியின் பெயரை இறந்தவர் பட்டியலில் சேர்த்தது அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காந்தி கூறுகையில், “வாக்குச்சாவடி நிலை அலுவலர் முறையாக கள ஆய்வு செய்யாமல் எனது பெயரை நீக்கியுள்ளார். நான் ஆதாரத்துடன் தட்டிக்கேட்ட பிறகு, தற்போது மீண்டும் பெயரைச் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகின்றனர். என்னைப் போலவே வேறு யாருடைய பெயராவது தவறாக நீக்கப்பட்டுள்ளதா என்பதைத் தேர்தல் அதிகாரிகள் கவனமுடன் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாக்காளர் பட்டியலில் இது போன்ற குளறுபடிகள் இனி நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.