கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட உயர் அதிகாரிகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகினர்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையில், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விபத்து நடந்த விதம் குறித்து அதிகாரிகள் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக விரிவான விளக்கம் கேட்டுள்ளனர்.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையாக, வரும் ஜனவரி மாதத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பி அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார், யூகங்களுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும், எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.