தமிழகத்தின் கடன் சுமை குறித்து விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி பங்களிப்பில் தமிழகம் வழங்கும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு வெறும் 29 பைசா மட்டுமே திருப்பித் தருவதாகவும், ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு 2 ரூபாய் 29 பைசா வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக ஆட்சியில் கடன் அளவு பல மடங்கு உயர்ந்த போதிலும், தற்போது தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

மத்திய பாஜக அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் கடன் 185 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அப்பாவு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழை மக்களுக்கான திட்டங்களை விமர்சிக்கக் கூடாது என்றார்.

மேலும், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.