மும்பையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை பாண்டூப் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேஷன் சாலையில், மாநகராட்சிப் பேருந்து ஒன்றை ஓட்டுநர் பின்னோக்கி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, அங்கு பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் மற்றும் பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
