தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் செல்வாக்கு மிக்கவரான இவரை, சமீபகாலமாக பாஜக மேலிடம் புறக்கணித்து வருவதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வரும் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற சூழலில், அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே அதிமுகவின் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், பொன். ராதாகிருஷ்ணனும் இணைந்தால் அது தவெக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக கட்சி தற்போது காங்கிரஸ், தேமுதிக மற்றும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு மாபெரும் மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
வரும் பொங்கலுக்குள் இந்தக் கூட்டணிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. ஒருவேளை பாஜக மேலிடம் பொன். ராதாகிருஷ்ணனைச் சமாதானப்படுத்தி அவருக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், அவர் தவெகவில் இணைவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அவ்வாறு அவர் இணையும் பட்சத்தில், ஆண்டிப்பட்டி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.
