தமிழகத்தில் கஞ்சா நடமாட்டமே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல்” என்று விமர்சித்த அவர், திருத்தணியில் கஞ்சா போதையில் 17 வயது சிறுவர்கள் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய கொடுமையை அமைச்சர் பொய் என்று சொல்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் நடைபயிற்சி விளம்பரங்களுக்கே அமைச்சர் முக்கியத்துவம் கொடுப்பதால், அவருக்குத் தமிழகத்தின் தற்போதைய உண்மை நிலை தெரியவில்லை என்று அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதற்குப் பல ஆதாரங்களை அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார். தூத்துக்குடியில் திமுக கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டது, கோவை கல்லூரி விடுதிகளில் கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது, ஆவடி மற்றும் தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் செய்திகளில் வருகின்றன.
இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் இந்தச் சமூகப் பேரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கஞ்சாவே இல்லை என்று அமைச்சர் பேசுவது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.
