தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றால், அமையவிருக்கும் ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்குமா என்பதை டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே ‘கூட்டணி ஆட்சி’ என்ற முழக்கம் அதிமுக மற்றும் பாஜக இடையே பெரும் கருத்து வேறுபாடுகளை உருவாக்கியிருந்தது. அதிமுக ஒருபோதும் கூட்டணி ஆட்சியை ஏற்காது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறிவந்த நிலையில், தற்போது ஹெச்.ராஜா மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​ஏற்கனவே, “அதிமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று இபிஎஸ் பேசி வரும் சூழலில், ஹெச்.ராஜாவின் இந்த மறைமுகமான “அதிகாரப் பகிர்வு” குறித்த பேச்சு, கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டிய நேரத்தில், அதிகாரப் பகிர்வு குறித்த இந்தப் பழைய சிக்கல் மீண்டும் முன்னுக்கு வந்திருப்பது, இரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் நேரத்தில் பெரும் சவாலாக அமையும் எனத் தெரிகிறது.