திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைக் கடனாளிகளாக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், திமுக என்பது என்ஜின் இல்லாத கார் போன்றது என்றும், கடந்த 10 ஆண்டுகளாக அந்தக் காரை கூட்டணி என்ற லாரிதான் இழுத்துச் செல்வதாகவும் அவர் கிண்டல் செய்தார். தற்போது அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கத் தொடங்கியுள்ளதால், திமுக கூட்டணியில் புகைச்சல் கிளம்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 56 மாத கால திமுக ஆட்சியில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அழுத்தத்தால் மட்டுமே 100 நாள் வேலைத் திட்டம் உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதிமுகவை மதவாதக் கட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், திமுக முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அது நல்ல கட்சியாகத் தெரிந்ததா எனக் கேள்வி எழுப்பினார். எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
