கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற பேக்கல் கடற்கரை கோட்டை பகுதியில், டிசம்பர் 29-ஆம் தேதி இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரவு 8 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியுள்ளது. இதனால் நீண்ட நேரமாகக் காத்திருந்த ரசிகர்கள், நிகழ்ச்சி தொடங்கியதும் ஒரே நேரத்தில் மேடையை நோக்கி முண்டியடித்துக் கொண்டு பாய்ந்துள்ளனர். இதில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சையில் உள்ளனர்;
அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு சோகமாக, இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கோழிக்கோட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர், பேக்கல் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள சுற்றுலாத் துறை சார்பில் டிசம்பர் 31 வரை நடைபெறும் இந்த சர்வதேச கடற்கரை திருவிழாவில், பாதுகாப்பு குறைபாடுகளே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
