திருச்சியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் சென்னையில் செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில், திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், காணாமல் போன மகளை ஆஜர்படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி, தான் தன்னுடன் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவே பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள் என்றும், காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது என்றும் குறிப்பிட்டனர்.
நீங்கள் விரும்பியவருடன் செல்வது உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், உங்களைப் பெற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், பெற்றோர்கள் தற்போதைய கால சூழலை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், கணவருடன் சென்று பெற்றோரைச் சமாதானப்படுத்துமாறு அந்தப் பெண்ணிற்கு அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.
