மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் நாற்பது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசு தடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் தீபம் ஏற்ற முடியாத சூழல் இருப்பது தி.மு.க. அரசின் அராஜகப் போக்கையே காட்டுகிறது என்றும், சி.ஐ.எஸ்.எப். வீரர்களைக் கூட அனுமதிக்காத மாநில அரசின் செயல் உலகெங்கும் உள்ள முருக பக்தர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் அம்பேத்கருக்கு அவமதிப்பு செய்து வருவதாகவும், மக்கள் உரிய நேரத்தில் இதற்குப் பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார். பூரண சந்திரன் மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய எல்.முருகன், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து அவதூறாகப் பேசிய மாணிக்கம் தாகூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருமாவளவன் மக்களுக்குத் துரோகம் இழைத்து வருவதாகவும், தமிழகத்தில் நடக்கும் முறையற்ற செயல்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் அவர் தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.
