தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு, மக்களிடையே நம்பிக்கையை இழந்த அரசாக செயல்பட்டு வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், மக்கள் நலனை புறக்கணித்து, மக்களின் வரிப்பணத்தை தேர்தல் அரசியலுக்காக செலவழித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க. ஆதரவாளர்களுக்கும், கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் திட்டங்கள் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்று குறிப்பிட்ட அவர், விதிகளை மாற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது என்றார்.
இந்தப் பாரபட்சமான அணுகுமுறையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாகவும், தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் உண்மை பிரச்சினைகளை புறக்கணித்து, திட்டங்களை அறிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தற்போது தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனிக்கவில்லை என்றும், இதற்கு மாறாக தி.மு.க. மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
ஊர் தோறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைகளை திறந்து, அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டுவதன் மூலம், அரசின் செயல்பாடுகளை விட விளம்பர அரசியலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கூறிய அவர், இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்தை ஒரு குடும்ப அரசியலுக்குள் கொண்டு செல்லும் சூழல் உருவாகும் என எச்சரித்தார்.
எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
