திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நான்கு சிறுவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட நபர் தமிழகத்திற்கு வேலைக்கு வந்த புலம்பெயர் தொழிலாளி அல்ல என்றும், அவர் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் சுற்றி வந்தவர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரில், மூன்று சிறுவர்கள் அவர்களின் வயது மற்றும் குற்றத்தின் தீவிரத்தைக் கருதி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு சிறுவன், சிறார் நீதிக்குழுவின் அறிவுறுத்தலின்படி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் நிலவத் தேவையில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
