கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் மதியழகன் ஆகியோர் நேற்று புதுடெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

காலை 10 மணி முதல் சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்குத் தகுந்த விளக்கங்களை அளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். திமுகவினர் இந்த விவகாரத்தைத் திசைதிருப்ப முயன்றாலும், எவ்வித சமரசமும் இன்றி உண்மையை நிலைநாட்டத் தொடர்ந்து செயல்படுவோம் என அவர்கள் உறுதிபடக் கூறினர்.

விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல் குமார், சிபிஐ கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளதாகவும், விசாரணைக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

சிபிஐ அதிகாரிகள் நாளை மீண்டும் விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளதால், நாளையும் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக அவர் கூறினார். கரூர் சம்பவத்தின் உண்மைத்தன்மை அனைவருக்கும் தெரியும் என்றும், சிபிஐ கேட்ட கேள்விகளைத் தற்போது பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.