உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் காவல் சார்பு ஆய்வாளர் ஒருவர் கார் ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பாய் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது அங்கு வந்த ரத்னா ரதி என்ற அந்த அதிகாரி தனது வாகனத்திற்கு முன்னால் நின்ற காரில் இருந்தவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

ஆத்திரமடைந்த அவர் காரின் கதவைத் திறந்து உள்ளே இருந்தவர்களையும் சமாதானம் செய்ய முயன்ற பொதுமக்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஓட்டுநரைத் தாக்கவும் முயன்றுள்ளார். தான் ஒரு காவல் அதிகாரி என்றும் தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் அவர் மிரட்டிய காட்சிகள் அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டன.

அலிகார் மாவட்டத்தில் பணியாற்றும் அந்த அதிகாரி நீதிமன்றப் பணி முடிந்து திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வராத நிலையில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மீரட் மாநகரக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.