சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், அன்புமணி ராமதாஸை மிகக் கடுமையாகச் சாடினார். “ராமதாஸ் போல ஒரு தந்தை யாருக்கும் கிடைக்க மாட்டார்; அன்புமணிக்கு மத்திய அமைச்சர், எம்.பி எனப் பல பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தவர் அவர்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாகத் தந்தையை அன்புமணி படுத்தும் பாடு நியாயமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். அன்புமணிக்குத் துரோகம் செய்வதுதான் கைவந்த கலை என்றும், வரும் 2026 தேர்தலுக்குப் பிறகு அரசியலில் அன்புமணி ஒரு ‘பூஜ்ஜியம்’ ஆகிவிடுவார் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

“எங்களை வழிநடத்துவார் என நம்பி அன்புமணியைச் சின்னையா என்று அழைத்தோம், ஆனால் அவர் எங்கள் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டார்” என்று அருள் எம்.எல்.ஏ வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்தத் துரோகத்தைப் பார்த்துத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெற்றோரின் வயிறும் எரிவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, இந்தப் பொதுக்குழுவில் அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்கியும், பசுமைத் தாயகம் தலைவர் பதவியிலிருந்து சௌமியா அன்புமணியை நீக்கியும் அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமதாஸ் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்த தொண்டர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.