காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சமீப காலமாக பாஜகவுக்கு சாதகமாக கருத்து தெரிவித்து வருவது, அந்தக் கட்சிக்குள் மட்டுமின்றி, ‘இந்தியா’ கூட்டணிக்குள்ளும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சசி தரூர், திக்விஜய சிங் ஆகியோருக்குப் பிறகு, தற்போது காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, “உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன் நிலுவை அதிகம்” என பிரவீன் சக்ரவர்த்தி கூறிய கருத்து, இந்தியா கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும், பிரவீன் சக்ரவர்த்தியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், பிரவீன் சக்ரவர்த்தி கருத்துக்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற கோஷத்தை முன்வைத்து செயல்படும் பாஜக தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் உண்மையான எதிரி. ஆனால், ஒரு காங்கிரஸ்காரர், காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலை’, காங்கிரசை அழிக்க முயலும் உத்தரப் பிரதேசத்தின் ‘புல்டோசர் மாடலுடன்’ ஒப்பிடுவது வேதனை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்பதையே காங்கிரஸ்காரர்கள் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் கடனை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது தவறான அணுகுமுறை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, மாநிலங்களின் அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றங்களை அவமதிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டிய காங்கிரஸ் நிர்வாகிகள், நெருக்கடிகளுக்கிடையிலும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநில அரசை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
“காங்கிரசுடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதே பாஜகவின் அரசியல் நோக்கம். அதை முறியடிப்பதே ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமை. ஆனால், சிலர் வலுவான கூட்டணியை உள்ளிருந்து சிதைக்க முயல்கிறார்கள்” எனவும் அவர் சாடியுள்ளார்.
மேலும், “‘ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்’ என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி நூற்றாண்டு நிறைவடைந்தாலும், அந்தச் சிந்தனை கொண்டவர்கள் காங்கிரசுக்குள் இன்னும் இருப்பது அவ்வப்போது வெளிப்படுகிறது. ராகுல் காந்தி பெரியார் வழியில் பயணிக்கிறார். ஆனால், காங்கிரசுக்குள் சிலர் RSS வழியில் பயணிப்பதே அந்தக் கட்சி சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல்” என்றும் ஆளூர் ஷா நவாஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
