லண்டனில் உள்ள கேஎப்சி உணவகத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மதீஷ் ரவிச்சந்திரன் என்ற இளைஞர், இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள கிளை ஒன்றில் பணியாற்றி வந்த இவரை, அங்குள்ள மேலாளர் இந்தியர் என்ற காரணத்திற்காக அடிமை என்றும், இந்தியர்கள் மோசடி செய்பவர்கள் என்றும் கூறி இனவெறி வார்த்தைகளால் தொடர்ந்து அவமதித்து வந்துள்ளார்.
மேலும், இந்தியர் என்பதால் அவருக்கு உரிய விடுப்புகளை வழங்காமல் புறக்கணித்ததோடு, தன்னிச்சையாகப் பணியிலிருந்தும் நீக்கியுள்ளார். இது தொடர்பாக மதீஷ் ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த லண்டன் தொழிலாளர் தீர்ப்பாயம், அவர் இழைக்கப்பட்ட கொடுமைகள் உண்மையானவை என்று உறுதி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் அபோட், மதீஷ் ரவிச்சந்திரன் நேரடியாக இனப் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவருக்குச் சுமார் 81 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நெக்சஸ் புட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். குறிப்பாக, அந்த உணவகத்தில் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்பட்டதும், விடுப்பு வழங்குவதில் இலங்கைத் தமிழ் ஊழியர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டதும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
லண்டனில் பணியாற்றும் இந்திய வம்சாவளி இளைஞருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய நீதி, புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
