மகாராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவர் குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் மற்றும் அவரது சகோதரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெயந்திலால் சோனி என்ற 38 வயது நபர், தனது சகோதரி தீபாவளியுடன் இணைந்து 36 வயதான மனைவி கல்பனாவைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை கல்பனா கோவிலுக்குச் செல்லத் தயாராகும் போது குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாகக் கூறி, அண்டை வீட்டாரின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், கல்பனாவின் உடலில் இருந்த காயத் தழும்புகளைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தது.
உடற்கூறு ஆய்வில் கல்பனாவின் மரணம் இயற்கையானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. அண்டை வீட்டாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், கல்பனா அவரது புகுந்த வீட்டினரால் துன்புறுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று காலை 5 மணிக்கே கல்பனா விழுந்துவிட்டதாகக் கூறிய ஜெயந்திலால், பல மணி நேரம் கழித்தே அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்ததும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதனையடுத்து போலிஞ்ச் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து ஜெயந்திலால் மற்றும் அவரது சகோதரியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
