உத்தரப் பிரதேச மாநிலம் டூத்வா தேசியப் பூங்காவில், தன் குட்டியை வேட்டையாட முயன்ற புலியிடமிருந்து தாய் காண்டாமிருகம் மிகவும் துணிச்சலாகக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காடுகள் நிறைந்த அந்தப் பகுதியில் குட்டியுடன் வந்து கொண்டிருந்த பெண் காண்டாமிருகம், சாலையைக் கடக்கும் முன்பு வேட்டையாடும் விலங்குகள் ஏதேனும் உள்ளதா என்று கவனமாகச் சோதித்தது.

 

ஆனால், அவை சாலையைக் கடந்த அடுத்த கணமே பதுங்கியிருந்த புலி ஒன்று திடீரென குட்டியைத் தாக்க முயன்றது. இதைக் கண்ட தாய் காண்டாமிருகம் ஆக்ரோஷத்துடன் புலி மீது பாய்ந்து தாக்கியதால், அந்த இடத்திலிருந்து புலி தப்பி ஓடியது. தன் குட்டியின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் தாய், மீண்டும் அதே பாதையில் பத்திரமாக அழைத்துச் சென்றது.

இயற்கையின் அபூர்வத் தருணமான இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதனைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.