மலையாளத் திரையுலகில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கே டஃப் கொடுத்தவர் நடிகை ஷகீலா. ஆனால், தனது 25 ஆண்டுகால திரைப் பயணத்தில் ஒரு விருது விழாவுக்குக் கூட தன்னை அழைக்கவில்லை என அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
“மலையாள சினிமாவில் நான் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர்களிடம் இருந்து பொறாமையையும், தனிமையையும் மட்டுமே சந்தித்தேன்; படப்பிடிப்பு தளங்களில் கூட என்னைத் தனியாக ஒதுக்கி வைத்தனர்” எனத் தனது திரையுலக வாழ்க்கையின் மறுபக்கத்தை அவர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். திறமையான உள்ளூர் பெண்களுக்கு வாய்ப்பு தராமல், மும்பை நடிகைகளுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் தரப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில் சிக்கித் தவித்த ஷகீலாவை, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் ஒரு தாயாக உலகிற்கு அடையாளம் காட்டியது.
இந்நிகழ்ச்சியில் புகழ் உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தன்னை ‘அம்மா அம்மா’ என்று அழைத்ததை இப்போதும் ஆச்சரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் பார்ப்பதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
திரையுலகில் தான் சந்தித்த காஸ்டிங் கவுச் புகார்கள் பற்றிப் பேசும்போது, “எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை; அப்படி யாராவது கேட்டிருந்தால் அப்போதே அடித்திருப்பேன்” எனத் தனது துணிச்சலான முகத்தையும் காட்டியுள்ளார். வெளி உலகம் என்ன சொன்னாலும் தனது குடும்பமே தனக்கு முக்கியம் எனக்கூறி நெகிழ்ந்துள்ளார் ஷகீலா.
