இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், ரகசியமாகப் படம் பிடிக்கவும் ஒலிகளைப் பதிவு செய்யவும் கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள், கேமரா பொருத்தப்பட்ட மூக்குக் கண்ணாடிகள் மற்றும் பெண் கேமராக்கள் (Pen Camera) போன்ற சாதனங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. இத்தகைய கருவிகள் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்புக் கருதி நாடாளுமன்ற வளாகத்தின் எந்தப் பகுதியிலும் இவற்றை எம்பிக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களவை செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து எம்பிக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகள் கொண்ட இக்கருவிகள் மூலம் அனுமதியின்றி காட்சிகள் அல்லது உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதைத் தவிர்க்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
