பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் காதலியைச் சந்திக்க நள்ளிரவில் அவரது வீட்டிற்குச் சென்ற இளைஞரை கிராம மக்கள் பிடித்து, அங்கேயே உள்ள சிவன் கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. சைய்யா பகுதியில் உள்ள ஜெய்த்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், ரூபேஷ் குமார் மற்றும் முஸ்கான் குமாரி ஆகிய இருவரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளனர்.
நள்ளிரவில் இருவரும் ரகசியமாகச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அதனைக் கவனித்த கிராம மக்கள் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அண்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து இருதரப்பு பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் சில தயக்கங்கள் இருந்தபோதிலும், கிராம மக்களின் தலையீட்டால் இருவீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர். உடனடியாக அருகில் இருந்த சிவன் கோயிலில் தாரை தப்பட்டை முழங்க, இந்து முறைப்படி வேத மந்திரங்கள் ஓத இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
சமூக வலைதளங்கள் மூலம் தொடங்கிய இவர்களது நட்பு காதலாக மலர்ந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஊர் மக்கள் முன்னிலையில் திருமணத்தில் முடிந்தது பெரும் பேசுபொருளாகியுள்ளது. திருமணத்திற்குப் பின் பேசிய ரூபேஷ் குமார், தனது காதலியை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார்.
