இத்தாலியின் அப்ரூஸோ மலைத்தொடரில் அமைந்துள்ள பக்லியாரா தேய் மார்சி என்ற குக்கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு லாரா என்ற பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அந்த நாடெங்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக மக்கள் தொகை சரிந்து வரும் இந்தப் பகுதியில், மனிதர்களின் குரல்களை விடப் பூனைகளின் சத்தமே அதிகமாகக் கேட்டு வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குழந்தையின் அழுகுரல் அந்த அமைதியை உடைத்துள்ளது.

ஏறத்தாழ 20 பேர் மட்டுமே வசிக்கும் இந்தக் கிராமத்தில், லாராவின் வருகை ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளதாக அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 42 வயதான இசையாசிரியர் சின்சியா மற்றும் அவரது துணைவர் பாலோ புஸ்ஸி ஆகியோரின் மகளான லாரா, தற்போதே அப்பகுதியின் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளார்.

இத்தாலியின் தேசிய புள்ளியியல் முகமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் அந்த நாட்டில் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 3,69,944 ஆகக் குறைந்துள்ளது. ஒரு பெண்ணிற்கான சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1.18 ஆகக் குறைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி மாறியுள்ளது.

குறிப்பாக அப்ரூஸோ பிராந்தியத்தில் மட்டும் 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் பிறப்பு விகிதம் 10.2 சதவீதம் அளவுக்குச் சரிவடைந்துள்ளதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை முதிர்ச்சியடைதல் மற்றும் காலி வகுப்பறைகள் போன்ற சவால்களை நாடு எதிர்கொண்டு வரும் நிலையில், லாராவின் பிறப்பு மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று கிராம மேயர் கியூசெப்பினா பெரோஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.