தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சைதாப்பூர் மண்டலத்தில் உள்ள சிவராம்பள்ளி கிராமத்தில், பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி அர்ச்சனா, தனது பெற்றோராலேயே கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி அர்ச்சனா மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை ரெட்டி ராஜு காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இருப்பினும், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த திருமணமான அனில் என்பவருடன் அர்ச்சனாவுக்கு இருந்த காதலை அவரது பெற்றோர் எதிர்த்ததும், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால் குடும்ப கௌரவத்திற்காக இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில், நவம்பர் 15-ஆம் தேதி இரவு அர்ச்சனா உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாகப் விஷம் குடிக்க வைத்தது தெரியவந்தது. விஷம் குடித்த பின்னரும் அவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில், தந்தை ரெட்டி ராஜு அர்ச்சனாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி, அர்ச்சனாவின் தந்தை ரெட்டி ராஜு மற்றும் தாய் லாவண்யா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், அர்ச்சனாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில், சிறுமியைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் அனில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.