2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக–பாஜக கூட்டணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி என பல அணிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டன.

இதற்கிடையே, தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை வரும் 9-ந் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாக அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அமமுக, பாமக, ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர் மீட்புக் குழு உள்ளிட்ட கட்சிகளும் விரைவில் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளன.

இதனால், தேர்தல் 4 முனை போட்டியா, 5 முனை போட்டியா என்பது விரைவில் தெளிவாகும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் விஜயின் தவெக, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில், அந்தக் கட்சி கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது. இந்நிலையில், தவெக–காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி, கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடிகர் விஜய்க்கு வலுவான செல்வாக்கு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், “கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதனால், அடிமட்ட தொண்டர்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கூட்டணி தோழமை என்ற பெயரில் காங்கிரசை திமுக புறக்கணித்ததாக தொண்டர்கள் கருதுகின்றனர். இதன் வெளிப்பாடாகவே, திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது” என்றார்.

மேலும் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைமையகம் சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து இருப்பதாகவும், அடிபட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலை திமுக கூட்டணி கூடாது என்பதாகவே உள்ளதாகவும் திருச்சி வேலுச்சாமி தெரிவித்தார்.
இந்த கருத்துகள், 2026 தேர்தலுக்கு முன் தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.