அகமதாபாத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எக்ராஜ் உசேன் செய்க் என்ற 46 வயது நபர், தனது உறவினரின் மனைவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அகமதாபாத்தில் வசித்து வரும் இவர், தனது உறவினரின் மனைவியை ஒருதலைப்பட்சமாகக் காதலிப்பதாகக் கூறி மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து கடந்த 2024-ஆம் ஆண்டு அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் உசேன் செய்க் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவரது குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் அளித்த புகாரின் பேரில் போலீசார் உசேன் செய்க்கைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் இந்தப் பெண்ணை அடைய வேண்டும் என்று தனது காதுகளில் ஒரு குரல் ஒலித்ததாகவும், அது ‘அல்லாவின் குரல்’ என்றும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அந்த அசரீரி உத்தரவிட்டதன் காரணமாகவே தான் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வரச் சென்றதாக அவர் விசித்திரமான விளக்கங்களை அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அகமதாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒருதலைப்பட்சக் காதலால் ஒரு குடும்பத்தையே சிதைக்க முயன்ற நபரின் இத்தகைய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
