பொதுவாக தொழில்நுட்பம் என்பது பொழுதுபோக்கிற்காகவே அதிகம் பயன்படுத்தப்படும். ஆனால், ஒரு மனைவி தனது கணவரின் பிறந்தநாளை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற, ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ (VR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம் இணையதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஐய்யா குணா என்ற அந்த நபருக்கு அவரது மனைவி ஒரு VR பாக்ஸை அணிவிக்கிறார். அந்தத் திரையில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்ற கதவைத் தாண்டி அவர் உள்ளே செல்ல, அங்கே மறைந்த தனது தாயின் உருவத்தைப் பார்த்ததும் அவர் நிலைகுலைந்து போகிறார்.

காலமான தனது தாயை மீண்டும் அத்தனை நெருக்கத்தில் பார்த்ததும், அவர் ஒரு சிறு குழந்தையைப் போல விக்கித்து அழுது, “அம்மா.. அம்மா..” என்று கதறியது பார்ப்பவர்களின் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by HappyTears_VR (@happytears_vr)

அந்த வீடியோவில், விர்ச்சுவல் உலகில் இருக்கும் தாய் தனது கைகளை நீட்ட, நிஜ உலகில் இருக்கும் அந்த நபர் தனது தாயை அணைப்பது போலக் காற்றைத் துழாவிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார்.

இந்த வீடியோ தற்போது 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதமே கிளம்பியுள்ளது. “உலகிலேயே இதுதான் மிகச்சிறந்த பரிசு; அந்தத் தாயின் பாசம் மீண்டும் அவருக்குக் கிடைத்துவிட்டது” என ஒரு தரப்பினர் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், “இது ஆறிக் கொண்டிருக்கும் காயத்தை மீண்டும் கீறுவது போல இருக்கிறது; இதுபோன்ற பரிசுகள் மகிழ்ச்சியைத் தர வேண்டுமே தவிர, ஒருவரை இப்படி உடைந்து போகச் செய்யக் கூடாது” என மறுதரப்பினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.