மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சித் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வினோதமான மற்றும் ஆடம்பரமான வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

மேலும் வெறும் கைகூப்பி ஓட்டுக் கேட்கும் காலம் போய், தற்போது லக்கி டிரா மூலம் அதிர்ஷ்டசாலிகளுக்கு சொகுசு கார்கள், நிலம், பைக்குகள் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்றவற்றை வழங்குவதாக வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக, சில வேட்பாளர்கள் ஒரு படி மேலே சென்று, தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், பெண்களுக்குத் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப் புடவைகள் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.

இத்தகைய பரிசுப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா சலுகைகள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பணமாகவும், பொருளாகவும் ஆசை காட்டுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறிப்பாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வளவு பெரிய அளவிலான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்படுவது, தேர்தலை ஒரு வர்த்தக முதலீடாக வேட்பாளர்கள் கருதுவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.