புதுச்சேரி அரசியலில் புதிய வரவாகத் தடம் பதித்துள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு அதிரடிப் பந்தயத்தை அறிவித்துள்ளார்.

“தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.100 கோடியைச் செலவிடுவேன்” என அவர் உறுதியளித்துள்ளார்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரான இவர், புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றப்போவதாகக் கூறி, ஆளும் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளை ‘ஊழல் சிண்டிகேட்’ எனச் சாடியுள்ளார்.

பெண்களைக் கவரும் வகையில் சார்லஸ் மார்ட்டின் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். மகளிருக்கான மாத உதவித்தொகையை ரூ.4,000 ஆக (ஆண்டுக்கு ரூ.50,000) உயர்த்துவது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்குத் திருமண உதவித்தொகையாக ரூ.1 லட்சம் மற்றும் 10 கிராம் தங்கம் வழங்குவது போன்றவை இதில் அடங்கும்.

மேலும், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் எனப் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.1,500 கோடி தேவைப்படும் என்றும், அதைத் தன்னால் சாத்தியப்படுத்த முடியும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.