பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்யும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெகுசராய் பகுதியைச் சேர்ந்த ரவிதா குமாரி என்ற மாணவி, தனது பி.ஏ. எகானாமிக்ஸ் தேர்வை எழுதுவதற்காகச் சஷி கிருஷ்ணா கல்லூரிக்குச் சென்றிருந்தார்.
தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த அங்கிருந்த பெண் ஊழியர்கள், உடனடியாக அவரை ஒரு காலியான வகுப்பறைக்கு அழைத்துச் சென்று உதவினர்.
கல்லூரி நிர்வாகம் ஆம்புலன்ஸை வரவழைத்த போதிலும், அது வருவதற்கு முன்பே ரவிதாவுக்கு வகுப்பறையிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தேர்வு மையம் முழுவதும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பின்னர் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தால் தேர்வு எழுத வந்த மாணவிக்கு அங்கேயே குழந்தை பிறந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
