தமிழக முதல்வர் தனிப்பிரிவில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் லிங்கபெருமாள் ஒரு நூதனமான மனுவை அளித்துள்ளார். அதில், தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவதால், சாதாரண மக்கள் அவற்றைப் வாங்குவது பெரும் கனவாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் தங்கம், வெள்ளி நகைகளை மானிய விலையிலோ அல்லது குறைந்த லாபத்திலோ விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

​அரசின் நேரடி விற்பனை மூலம் தரம் உறுதி செய்யப்படுவதோடு, தனியார் நகைக்கடைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான செய்கூலி, சேதாரம் போன்ற சுமைகளில் இருந்தும் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அரிசி, பருப்பு போல் தங்கமும் ரேஷன் கடையில் கிடைக்குமா என்ற இந்த விநோதமான மற்றும் சுவாரஸ்யமான கோரிக்கை தற்போது பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.