தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முன்னதாகவே கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்க பணம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிய அருள்ராஜ் என்பவர் பேரம் பேசியதாகவும் அவருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கக்கூடாது எனவும் தற்போது நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்திற்கு முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் அலுவலகம் வாயிலில் வைத்தே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்த நிலையில் அடுத்தடுத்து தூத்துக்குடி மற்றும் திருச்சி நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா தன் ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் காலையிலிருந்து சென்னை பனையூர் அலுவலகத்தின் முன்பாக காத்திருந்த நிலையிலும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
அவரிடம் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் தற்போது உள்ளே அனுமதிக்கப்படாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காலையில இருந்து கட்சி அலுவலகத்தின் முன்பாக அஜித்தா காத்திருந்தும் விஜய் கண்டுகொள்ளாததால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சாகுற வரைக்கும் இங்கதான் இருப்பேன் தளபதி வரனும் இங்கே என்று கூறியுள்ளார். மேலும் கட்சி அலுவலகத்தின் முன்பாகவே சொந்த நிர்வாகிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது விஜய்க்கு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
