தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவதற்காக இன்று சென்னை வரும் பியூஷ் கோயல், தொகுதிப் பங்கீடு மற்றும் புதிய கூட்டணிகளை உருவாக்குவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது பசுமை வழிச்சாலை இல்லத்தில் சந்தித்து பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அவருக்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்து அளிக்க உள்ளார்.
இந்தச் சந்திப்பில் கூட்டணி விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மாலை நேரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.
