உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், சக்கர நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நபர் ஒருவர், அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து எழுந்து நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ சீதாராம் வர்மா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதவி பெறுபவர் போல ஒரு நபர் நாற்காலியில் அமர, அவருக்கு மாலை அணிவித்து மற்றவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், கேமராக்கள் நகர்ந்ததும் அவர் சாதாரணமாக எழுந்து சென்றதைக் கண்ட நெட்டிசன்கள், இது வெறும் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட நாடகம் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த வீடியோ பரவியதை அடுத்து விளக்கம் அளித்த மாவட்ட நலத்துறை அதிகாரி முதித் ஸ்ரீவஸ்தவா, அந்த சக்கர நாற்காலி வீடியோவில் இருந்த நபருக்காக வழங்கப்பட்டது அல்ல என்று தெரிவித்தார். பாங்கேபூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற மாற்றுத்திறனாளிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் விழாவிற்கு வரவில்லை என்றும், எனவே அடையாளத்திற்காக மற்றொருவர் அதில் அமர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

“>

 

இருப்பினும், தகுதியானவர்களுக்கு உண்மையான உதவி சென்றடையாமல், இது போன்ற அரசியல் விளம்பரங்கள் செய்யப்படுவது தவறான முன்னுதாரணம் என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.