வழக்கமாக ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைப்பதற்கென நான்கு பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 2,500 நோட்டுகள் வரை அடுக்க முடியும். அதாவது, ஒரு இயந்திரத்தில் மொத்தம் 10,000 நோட்டுகள் வரை நிரப்ப வாய்ப்புள்ளது. நீங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை (தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும்) கணக்கில் கொண்டால், ஒரு இயந்திரத்தில் அதிகபட்சமாக 80 லட்சம் ரூபாய் வரை வைக்க முடியும்.
ஆனால், நடைமுறையில் மக்களின் தேவை மற்றும் வங்கியின் இருப்பு நிலையைப் பொறுத்து 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே அதிகம் நிரப்பப்படுகின்றன. இதனால் பெரும்பாலான ஏ.டி.எம்களில் சராசரியாக 20 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை பணம் இருப்பு வைக்கப்படுகிறது. இந்த பண வரம்பு என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் அதிகப்படியான பணமும், கிராமப்புறங்களில் ஓரளவு குறைவான பணமும் நிரப்பப்படுகிறது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இன்சூரன்ஸ் வரம்புகள் காரணமாகவும் வங்கிகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை ஏடிஎம்களில் தேக்கி வைப்பதில்லை. மேலும், இயந்திரத்தில் பணம் தீரப்போகும் நிலையில், அது குறித்த தகவல் தானாகவே வங்கிக்குச் சென்றுவிடும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
