திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக செயல்படுத்தப்படாததால், செயல்பாடு இல்லாத பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டினார்.
திருப்பூரில் குப்பை பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக அமல்படுத்தப்படாமல், பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அபாயமாக உள்ளது. பாறைக்குழிகளில் கொட்டப்படும் குப்பையால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உப்பு அளவு அதிகரித்துள்ளதாகவும், இது கடும் சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்றுமதி நிறைந்த நகரமாக விளங்கிய திருப்பூர், தற்போது சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதியாக மாறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு ‘புலி வாலை பிடித்த நிலை’யில் சிக்கியுள்ளது என விமர்சித்தார். மேலும், திருப்பூர் மாவட்டத்தை அரசு புறக்கணித்து வருவது, மக்கள் மீது அவர்களுக்கு உள்ள அக்கறை எந்த அளவிலானது என்பதை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார். உரிய ஆய்வுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருந்தால், அவர்களை மீண்டும் சேர்க்க தமிழக வெற்றி கழகம் முயற்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான அறிவிப்பை கட்சி தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டு அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அருண்ராஜ், பிரச்சினை இல்லாத இடத்தில் பிரச்சினையை உருவாக்கியவர்கள் இவர்களே எனவும், அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
