உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இன்று 1,397-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 28 நிபந்தனைகள் அடங்கிய அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். இருப்பினும், சில நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்து வருவதால் போர் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, ரஷியாவில் உயர் கல்வி பயிலச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் அதிக சம்பளம் மற்றும் சிறை தண்டனையிலிருந்து தப்பித்தல் போன்ற காரணங்களால் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராகப் போரிட வைக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், குஜராத் மாநிலம் மோர்பியைச் சேர்ந்த 22 வயது மாணவர் முகமது ஹுசைன் என்பவர் ரஷியாவில் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிக்கி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க ரஷிய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்த அவர், வெறும் 16 நாட்கள் பயிற்சியுடன் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
போர்க்களத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், உக்ரைனின் 63-வது மெக்கானைஸ்டு பிரிகேட் வீரர்களிடம் அவர் சரணடைந்தார். தற்போது உக்ரைன் ராணுவத்தின் பிடியில் கைதியாக உள்ள முகமது ஹுசைன், தன்னை மீட்குமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஷியாவில் நிலவும் மோசமான சூழலை விவரித்துள்ள அவர், தனது பாதுகாப்பான வருகைக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
